புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 16:00 வாசிப்புக்கள்: 53 பகுதி: செய்திகள் - உலக செய்திகள்
இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த சர்வதேசம் முன்வர வேண்டும் என்று இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சர்வதேசப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பலஸ்தீனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலினால் கடத்திச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வரும் சம்பவங்களைக் கண்டித்து இப்பேரவை ஏற்பாடு செய்த மாநாட்டில் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பலஸ்தீன சட்டசபை உறுப்பினர்கள் பலஸ்தீன நிலத்திலேயே கைதுசெய்யப்படுவது மனித உரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என்று அப்பேரவையின் தலைவர் ஹுஸைன் இப்றாஹீம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் இந்நடவடிக்கை சர்வதேசப் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் பேரச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் இஸ்ரேலிய சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கலாநிதி அஸீஸ் துவைக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இப்றாஹீம், இஸ்ரேலின் மனித உரிமை மீறல் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.
பலஸ்தீனர்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழும் உரிமையுள்ளவர்கள் என்று தெரிவித்துள்ள அவர், பாதுகாப்புச் சபை இஸ்ரேலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.










